"சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே
அதைத் தொழுது படித்திடடி பாப்பா"
மொழி, பண்பாட்டினுடைய மிகப்பெரிய கருவூலம். நம் எண்ணங்களைப் பிறருக்குத் தெரிக்கவும் பிறருடைய
உணர்வுகளை நாம் புரிந்து கொள்வதற்கும் உதவுவது மொழியாகும். காலத்தால் பழமையான ஆதிகால மனிதனின்
தாய்மொழியாகத் தமிழ் திகழ்கிறது. இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் வளர்ந்து கன்னித் தமிழாய்,
செந்தமிழாய், வண்டமிழாய், பைந்தமிழாய் வலம் வரும் ஒரேமொழி தமிழ்மொழியாகும்.
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே
அதைத் தொழுது படித்திடடி பாப்பா
என்றார் பாரதியார். அத்தகைய உயர்மொழியான செம்மொழித் தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை; அதன்
தொடர்ச்சியில் இருக்கிறது என்கிறார் ஈழத்துத் தமிழர் அறிஞர் கா.சிவத்தம்பி. அப்பொன்மொழிக்கு ஏற்ப,
ஈராயிரம் ஆண்டு வளமையும் செழுமையும் மாறாமல் தாய்த்தமிழை இளைய தலைமுறையினரான மாணவச் செல்வங்களிடம்
கொண்டு சேர்க்கும் பொறுப்பினைத் தமிழ்த்துறை சிறப்பாகச் செய்து வருகிறது. எந்த மொழியைக் கற்றாலும்
ஒருவரின் சிந்தனை உருவெடுப்பது அவரவரின் தாய்மொழியில்தான். அத்தகைய தாய்மொழியான தமிழில் பேச்சு,
கவிதை, கட்டுரை எனப் பல போட்டிகளில் மண்டல, மாநில அளவிலான பரிசுகளை மாணவர்கள் பெற்றுள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.‘கேடில் விழுச்செல்வம் கல்வி’ என்பதற்கு ஏற்பத் தமிழ்மொழிப் பாடத்தில்
பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் நம் கல்லூரி மாணவர்கள் இடம்பிடித்துள்ளனர்.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு.
என்று பாரதிதாசன் குறிப்பிட்டது போன்று தாய்மொழியாம் தமிழ்மொழியைப் போற்றிப் பாதுகாக்கும் சீரிய
பணியைச் செய்வதே தமிழ்த்துறையின் நோக்கமாகத் திகழ்கிறது.